திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு நகரப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு மணப்பாளையம் நோக்கி திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதேபோல் சேலத்தில் இருந்து கார் ஒன்று சமயபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த காரை சேலம் மாவட்டம் கொண்டலம்பட்டியைச் சேர்ந்த 44 வயதான மோகன் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இன்று திருவாசி என்ற
பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை கார் முந்திச் செல்லும் போது எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த கார் விபத்துக்குள்ளான காரின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 12 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் திருச்சி நாமக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.