திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்து சென்ற வாலிபரை கடத்திச் சென்ற வழக்கில் நான்கு பேரை தொட்டியம் போலீசார் கைது செய்த நிலையில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்ததாக மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( 25 ) இவர் வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்த கோபிகா (19 ) என்ற பெண்ணை 11. 6 2023 அன்று காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் அண்ணன், தங்கை முறை உள்ளவர்கள்.
இந்நிலையில் காட்டுப்புத்தூர் காவல் நிலைய வழக்கு சம்பந்தமாக தொட்டியம் ஜேஎம் கோர்ட்டுக்கு கடந்த 21ம் தேதி கிருஷ்ணமூர்த்தி வந்துள்ளார். கோர்ட்டுக்கு வந்த வேலை முடிந்து திரும்பிய வரை மனைவியின் உறவினர்கள் காரில் கடத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கோபிகா தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கரூர் மாவட்டம், ஆர் புதுக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீநாத் (24), அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் (25), கரூர் மாவட்டம் கோயம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (29) அதே ஊரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய நான்கு பேரையும் தொட்டியம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் உத்தரவின் பேரில் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் சந்தேகத்தின் பேரில், பெண்கள் உட்பட நான்கு பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கிருஷ்ணமூர்த்தி தொட்டியம் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டு வீடு திரும்பிய போது கார் டிரைவர் சரவணன் என்பவர் உதவியுடன் கிருஷ்ணமூர்த்தி கடத்தப்பட்டார். கோபிகாவின் அண்ணன் கரூர் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த ரவிவர்மன் (22), அவரது தாய் ஹேமலதா (37), கரூரை சேர்ந்த பாட்டி பாப்பாத்தி (57),ரவிவர்மனின் நண்பர் வீரராக்கியத்தை சேர்ந்த தினேஷ் (33) ஆகியோர் சேர்ந்து காரில் கிருஷ்ணமூர்த்தியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாகவும் மாயனூர் அருகே காரிலேயே கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை கல்லணை அருகே காவிரி ஆற்றில் வீசி சென்றதாகவும் போலீசாரிடம் கூறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கல்லணை உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் கிருஷ்ணமூர்த்தி யின் சடலத்தை தேடினர். சடலம் கிடைக்கவில்லை. திருமணம் ஆன 10 நாளில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.
அடையாளம் காணப்படாத சடலம் கிடைத்தால் தகவல் தெரிவிக்கும்படி பிற காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொட்டியம் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்ததால், ஏற்பட்ட விரோதம் காரணமாக நீதிமன்றத்திற்கு சென்று திரும்பிய வாலிபரை கடத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.