திருச்சி மாநகராட்சி 39ஆவது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் காட்டூர் சுற்றுவட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கட்டிடமும் பழுதான நிலையில் அதற்காக ரூ1.20 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை காட்டூரில் இயங்கி வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் நடந்தது.
இந்த விழாவிற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை வகித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இந்த விழாவில் மருத்துவர் கார்த்திக், உதவி ஆணையர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணி உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டும் பணி தொடங்குவதால் காட்டூர் ஆயில் மில் புகழ் நகர் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் 7ம் தேதியான இன்று முதல் செயல்பட துவங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.