திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பளூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி. இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகாயம்.
கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் தாலுக்கா ஆறுமுக கவுண்டர் வீதி பாரதியார் தெருவை சேர்ந்தவர் 64 வயதான வெங்கடாசலம்.இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சமயபுரம் அருகே பளூரில் உள்ள உறவினரின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக கோயம்புத்தூரில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பளூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் வெங்கடாசலம் மற்றும் தனலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் .மேலும் காரில் இருந்த பொற்கொடி, மோனிகா, மனோன்மணி, 6 வயது பெண் குழந்தை கிரிசா 2 வயது ஆண் குழந்தை ராய் கிருஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் காயம்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிறந்தநாள் விழா கொண்டாட வந்த உறவினர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.