திருச்சி, திருவெறும்பூர் அருகே இறந்து போன கணவரின்உடலை கேட்டு விவாகரத்து ஆன மனைவி உரிமை கொண்டாடி திருச்சி எஸ்பியிடம் புகார் கொடுத்ததால் இறந்து போனவரின் உடலை இரண்டாவது மனைவியிடம் ஒப்படைப்பதா? முதல் மனைவியிடம் ஒப்படைப்பதா? என்பதில் சிக்கல் ஏற்பட்டதால் முதல் மனைவியின் வாரிசுகளிடம் ஒப்படைக்க தாசில்தார் உத்தரவு வழங்கினார்
பெரம்பலூர் அருகே உள்ள வேப்பூரை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (45) இவர் லதா (34) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 8 வருடத்திற்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றதால் கோடீஸ்வரன் கடலூரில் வாழ்ந்து வந்தார்.இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரை கடந்த 8 மாதத்திற்கு முன்பு 2வதாக திருமணம் செய்து அவரோடு 4 நாட்கள் மட்டும் வாழ்ந்து விட்டு பின்னர் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் கோடீஸ்வரன் சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்துசாந்தியோடு வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோடீஸ்வரனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோடீஸ்வரன் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி திருவெறும்பூர் அருகே கணேசபுரத்தில் உள்ள சாந்தி வீட்டிற்கு கோடீஸ்வரன் வந்துள்ளார்.
அப்படி வந்தவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரை 29ஆம் தேதி அதிகாலை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கோடீஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சாந்தி முதல் மனைவி லதாவிற்கு தகவல் கொடுத்துள்ளார். லதா திருச்சி எஸ்பி அலுவலகத்தில் இறந்து போன கோடீஸ்வரன் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி மனு கொடுத்துள்ளார். இந்நிலையில் சாந்திக்கு பிறகு தான் தெரிந்துள்ளது ஏற்கனவே லதாவை கோடீஸ்வரன் கடந்த 8 வருடத்திற்கு முன்பே விவாகரத்து செய்துள்ளார் என்பது. இதனால் இறந்து போன கோடீஸ்வரனின் உடலை யாரிடம் ஒப்படைப்பது என்ற பிரச்சனை ஏற்பட்டது.
இந்நிலையில் 31ஆம் தேதியான நேற்று காலை துவாக்குடி அரசு மருத்துவமனையில் திருவெறும்பூர் தாசில்தார் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து உடலை யாரிடம் ஒப்படைப்பு செய்வது என்பது தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம் தீவிர விசாரணைக்கு பின்பு முதல் மனைவி முறையாக விவாகரத்து பெற்று இருந்தாலும் முதல் மனைவிக்கு வாரிசுகள் இருப்பதால் வாரிசுகளின் அடிப்படையில் வாரிசுகளிடம் உடலை ஒப்படைக்க உத்தரவு வழங்கினார் அதன்படி உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது