திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போதை பொருள் கடத்தல், சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் என பலர் உள்ளனர். இதில் சிலர், இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட இங்கிருந்தே சில நடவடிக்கைகளை எடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த ஜூலை 20ம் தேதி 100க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் திருச்சி முகாம் சிறையில் சோதனை நடத்தினர். அப்போது 11 கைதிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் அப்போது, லேப்டாப், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக சிறப்பு முகாமில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 க்கும் மேற்பட்டோர் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஏற்கனவே விசாரணை நடத்திய 11 பேரிடம், மீண்டும் விசாரணை நடந்தது. இதில் குணசேகரன், புஷ்பராஜ், கோட்டை காமினி , தனுகா ரோசன், கென்னடி பெர்னாண்டோ, முகமது அனீஷ், திலீபன், சுருங்கா, நிஷாந்தன் ஆகிய 9 பேரை கைது செய்து, சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிலையில் அடைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.