திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவராக கே. ஒண்டிமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக மாவட்ட தலைவர் பதவிகளுக்கான 2 ஆவது முறை கருத்து கேட்பு கூட்டம் 17-ந் தேதி நடந்தது. இதில் திருச்சி மாவட்ட தலைவர் பதவிக்கு கே. ஒண்டிமுத்து, காளீஸ்வரன், கெளதம், கே. அஞ்சா நெஞ்சன் உள்ளிட்டோர், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாவட்ட தலைவர்கள் குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி, சென்னை கமலாலயத்தில் நடந்தது. காணொலிக் காட்சி மூலம் நடந்த இந் நிகழ்வில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக கே. ஒண்டிமுத்து, புறநகர் மாவட்ட தலைவராக கே. அஞ்சா நெஞ்சன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் கே. ஒண்டிமுத்துவுக்கு, முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜசேகரன், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் இல. கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, திருச்சியில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.