திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் அருகே எம். புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி பிரியா (31) . இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டு ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பிரியா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதனை அடுத்து பிரியா வீட்டில்
ஜோதிடம் பார்த்த போது மீண்டும் பெண் குழந்தை தான் பிறக்கும் என்று கூறியதால் பிரியா குடும்பத்தினர் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து பிரியா குடும்பத்தினருக்கு தெரிந்த துறையூர் அடுத்த செங்காட்டுப்பட்டியில் மெடிக்கல் வைத்து நடத்தி வரும் சித்ரா என்பவரிடம் கருக்கலைப்பு செய்த போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடல் நிலை மோசமான நிலையில் பிரியா துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 108 ஆம்புலன்ஸில் செல்லும் போது பிரியா இறந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளது. இது குறித்து கருக்கலைப்பு செய்த செங்காட்டுப்பட்டியில் மெடிக்கல் வைத்து நடத்தி வரும் சித்ரா என்பவரை துறையூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.