Skip to content
Home » சிறந்த மாநகராட்சி……திருச்சி மேயர் அன்பழகன்…. முதல்வரிடம் நாளை விருது பெறுகிறார்

சிறந்த மாநகராட்சி……திருச்சி மேயர் அன்பழகன்…. முதல்வரிடம் நாளை விருது பெறுகிறார்

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் வீதமும், நகராட்சியை பொறுத்தமட்டில் முதலிடம் பெறும் நகராட்சிக்கு ரூ.30 லட்சம், 2-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.20 லட்சம், 3-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பேரூராட்சியை பொறுத்தமட்டில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பேரூராட்சிகளுக்கு தலா ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.6 லட்சம் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதேபோன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மண்டலங்களுக்கு தலா ரூ.30 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் வீதம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 2 கோடியே 26 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

13 கருப்பொருளை மையமாக கொண்டு சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி முதலிடத்தையும், தாம்பரம் மாநகராட்சி 2-ம் இடத்தையும் பிடித்தது. நகராட்சிகளை பொறுத்தமட்டில் ராமேசுவரம் முதலிடத்தையும், திருத்துறைப்பூண்டி 2-வது இடத்தையும், மன்னார்குடி 3-வது இடத்தையும் பிடித்தது.

பேரூராட்சியை பொறுத்தமட்டில் விக்கிரவாண்டி முதலிடத்தையும், ஆலங்குடி 2-வது இடத்தையும், வீரக்கால்புதூர் 3-வது இடத்தையும் பெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களில் 9-வது மண்டலம் முதலிடத்தையும், 5-வது மண்டலம் 2-வது இடத்தையும் பிடித்தது.

நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதுகளை மாநகராட்சிகளின் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களிடம் வழங்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *