மணப்பாறையில், ரயில்வே கேட் பழுதானதால், சிக்னல் கிடைக்காமல், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்நிறுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு சரி செய்த பின், 25 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து புறப்பட்ட அந்த எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 7:15 மணிக்கு திருச்சி வழியாக மணப்பாறை சென்ற போது, மணப்பாறை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பழுதானதால், கேட்டை கடந்து செல்ல ரயிலுக்கு சிக்னல் கிடைக்கவில்லை.
இதனால், எக்ஸ்பிரஸ் ரயில், கீரைத்தோட்டம் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது. இது குறித்து மதுரை மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு தொழில் நுட்ப பொறியாளர்களுடன் சென்ற ரயில்வே அதிகாரிகள், ரயில்வே கேட்டில் ஏற்பட்ட கோளாறு சரி செய்த பின், 25 நிமிடம் தாமதமாக, 7:40 மணிக்கு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மணப்பாறையில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.