Skip to content

மணப்பாறை சாலை விபத்து…. உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி…

  • by Authour

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. மணப்பாறை அருகே கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார் அரசு பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் காரில் பயணித்தவர்கள் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திருச்சிராப்பள்ளி மாவட்டம், லெட்சம்பட்டி பிரிவு ரோடு மணப்பாறை வட்டம், வையம்பட்டி கிராமம் அருகே, திருச்சிராப்பள்ளி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (25-6-2023) மாலை திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரின் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் காரில் பயணம் செய்த மணப்பாறை வட்டம், கே.உடையாப்பட்டியைச் சேர்ந்த திரு. முத்தமிழ்செல்வன், த/பெ.முத்துசாமி (வயது 40), திரு ஐயப்பன், த/பெ.இரவிச்சந்திரன் (வயது 35) திரு.மணிகண்டன், த/பெ.கணேசன், மணப்பாறை வட்டம், ஆலிப்பட்டியைச் திரு.நாகரத்தினம், த/பெ.பப்பு மற்றும் தோகைமலை வட்டம், பில்லூரைச் சேர்ந்த திரு. தீனதயாளன், த/பெ.செல்வராஜ் (வயது 19) ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *