Skip to content
Home » திருச்சி மலைக்கோட்டை சித்திரை தேர் திருவிழா

திருச்சி மலைக்கோட்டை சித்திரை தேர் திருவிழா

திருச்சியின் அடையாளமாய் விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த உச்சி பிள்ளையார் கோவிலில் 100 கால் மண்டபம்,  மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. மேலும் மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாக தெரியும்.

மலைக் கோட்டையின் உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. இப்படி வடிவமைக்கப்பட்ட கோயிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது. திருச்சி மலைக்கோட்டை கடந்த 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது.

இக்கோயிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன.பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன. கோட்டையுடன் கம்பீரமாக காட்சிதரும் கோவில் திக்கற்றவர்களுக்கு இத்தலத்து ஈசன், தாயாக இருந்து அரவணைத்துக் காக்கிறார். தாயை இழந்தவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு தாயாக இருந்து வழி நடத்துவார் என்பது நம்பிக்கை. ரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். சுகப்பிரசவம் ஆவதற்கு இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும்.

இத்தகைய சிறப்புமிக்க கோவில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா, தேர்ரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வந்தது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று  நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் மேஷ லக்கனத்தில்

சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு மலைக்கோட்டை உள் வீதி வழியாக 5.40 மணிக்கு தாயுமான சுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினார். பின்னர் 6 மணிக்கு திருத்தேரை ஆயிரக்கணகான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல, அதை தொடர்ந்து கோவில் யானை லட்சுமியும் செல்ல, பெரிய தேரையும், சிறிய தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதற்காக மலைக்கோட்டை சுற்றி உள்ள 4 வீதிகளிலும் தேர் செல்ல ஏதுவாக சாலைகளில் இருந்த பள்ளங்களை சீர்செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர். மேலும் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆகையால் மலைக்கோட்டை பகுதி முழுவதும் விழா கோலம் கொண்டுள்ளது. பக்தர்கள் நேத்திகடன் செலுத்தியும், , அன்னதானம் வழங்கியும் தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *