திருச்சி உறையூர் வடிவேல் நகரை சேர்ந்தவர் நந்தகுமார்(31), திருமணம் ஆகாதவர். தாயாருடன் வசித்து வந்தார். இவருக்கு திருச்சி தென்னூர் சங்கீதபுரம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் மனைவி ஜெசிந்தாவுடன்(47) பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெசிந்தாவிற்கு திருமணமாகி 21 வயதில் மகளும் ,17 வயதில் மகனும் உள்ளனர். இருவருக்கும் இடையேயான பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்த கள்ளக்காதல் விவகாரம் ஜெசிந்தா வீட்டிற்கு தெரியவந்தது. இதனை ஜெசிந்தாவின் கணவர் சத்தியமூர்த்தி கண்டித்தார்.
இதனை அடுத்து இருவருடைய கள்ளக்காதலும் வீட்டிற்கு தெரிய வந்த காரணத்தால் நேற்று மதியம் ஜெசிந்தா நந்தகுமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் நந்தகுமாரின் தாயார் இல்லை. இரவில் இருவரும் அங்கேயே தங்கி இருந்தனர்.
இன்று காலை வீட்டை யாரும் திறக்காமல் இருந்த காரணத்தினால் அக்கம் பக்கத்தினர் இன்று காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உறையூர் காவல்துறையினர் வந்து கதவைத் திறக்க முற்பட்ட பொழுது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது. இதனை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜெசிந்தா நந்தகுமார் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர். நந்தகுமார் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜெசிந்தா ஊஞ்சல் மாட்டும் கொக்கியில் தூக்கு போட்டு இருந்தார். உறையூர் போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.