திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையும், லாட்டரி விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து போலீசுக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து கஞ்சா, லாட்டரி விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா உத்தரவின் பெயரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர், ஏர்போர்ட், பாலக்கரை, தில்லை நகர், உறையூர் ஆகிய பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் திருச்சி கண்டோன்மெண்ட், செசன்ஸ் கோர்ட், திருவரங்கம், கோட்டை, உறையூர் ஆகிய பகுதிகளில் போலீசார் லாட்டரி விற்பனையை தீவிரமாக கண்காணித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதில் 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் லாட்டரி விற்றதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இனியும் தொடர்ந்து கஞ்சா, லாட்டரி விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் உறையூர் பகுதியில் சூதாட்டம் நடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.