தூத்துக்குடியில் இருந்து உர மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கடலூர் நோக்கி புறப்பட்டது. லாரியை தூத்துக்குடி எட்டயபுரத்தை சேர்ந்த அர்ஜுனன் வயது (27) என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த லாரி இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் திருச்சி சஞ்சீவி நகர் பஸ் நிறுத்தம் அருகாமையில் வந்தபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அங்குள்ள பஸ் நிறுத்த நிழற்குடையில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அந்த நிழற்குடையில் பஸ்சுக்கு ஊருக்கு செல்ல காத்திருந்த மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது 60) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார். இவர் சஞ்சீவி நகர் பகுதியில் உள்ள ஒரு
தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். லாரியை ஓட்டி வந்த அர்ஜுனன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தினால் லாரியில் இருந்த உர மூட்டைகள் சாலையில் கொட்டியது. இது பற்றி தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த முருகேசன் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான லாரியும் அப்புறப் படுத்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.