மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1ம்தேதி முதல் அமுலுக்கு வந்தது. இந்த சட்டங்களை கண்டித்து இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் தொடர் போராட்டத்தை ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் இருந்து உழவர் சந்தைக்கு வழக்கறிஞர்கள் பேரணியாக சென்றனர். அப்பொழுது 3குற்றங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெண் வழக்கறிஞர்களும் திரளாக பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டப் பேரணியை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ துவக்கி வைத்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு துரைவைகோ அளித்த பேட்டியில் கூறியதாவது:
எதிர்க்கட்சிகளை சார்ந்த
150க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சபையில் இருந்து வெளியேற்றிவிட்டு பாஜக, புதிய சட்டத்தை நிறைவேற்றினார்கள்.இந்தச் சட்டம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மூன்று சட்டங்களை மாற்றுவது மட்டுமல்ல சமஸ்கிருதம் கலந்த பெயர்களை அதற்கு கொடுத்துள்ளனர்.
இந்த நடவடிக்கை இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது.
இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து போராடும் மக்களை கைவிலங்கு இட்டு அழைத்துச் செல்லலாம், மேலும் விசாரணை நாட்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளனர்.
இது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என்றுதான் நாங்கள் இதனை எதிர்க்கிறோம்.
சட்ட வல்லுனர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து பின்னர் இந்த மாற்றங்களை கொண்டு வந்திருக்க வேண்டும் அதற்கு மாறாக தன்னிச்சையாகவே இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்கள்.
இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
இன்று போராட்டத்தில் ஈடுபடும் உங்களுடன் நாங்கள் பயணிக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
ஆனால் பாஜக இனிப்பு கொடுத்து கொண்டாடுகி்றது என்றால் அது தமிழகத்திற்கு விரோதமான இயக்கம். அதனால் அப்படித்தான் செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.