திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த இ. வெள்ளனூரில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் நடந்த இம்முகாம் துவக்க விழாவில் லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இந்த விழாவில் ஒன்றிய க்குழு தலைவர் ரசியா ராஜேந்திரன், துணைத்தலைவர் கனகராஜ், வெங்கடாசலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மார்ட்டின் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இன்று மதியம் சுமார் 1 மணியளவில் அதே இ. வெள்ளனூரில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமிற்கு வந்த அமைச்சர் நேரு மற்றும் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் ஆகியோர் முகாமை பார்வையிட்டனர். தொடர்ந்து அம்முகாமில் மனு வழங்கிய 30 பேருக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நேரு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, புள்ளம்பாடி ஒன்றியக்குழுத் தலைவர் ரசியா ராஜேந்திரன் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் கலந்து கொள்ளவில்லை.
இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, இது குறித்து தனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றார். ஒரே அரசு விழாவில் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் தனித்தனியாக கலந்து கொண்ட விவகாரம் திருச்சி அதிகாரிகள் மற்றும் திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தனக்கு அழைப்பு விடுக்கப்படாமல் லால்குடியில் நடந்த அரசு விழா குறித்து பேஸ்புக் பக்கத்தில் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் பதிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
