திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா, ஆளிப்பட்டி அருகே மொண்டிப்பட்டி கிராமம் வடுகப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன்.
சமூக ஆர்வலரான இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது தாயார் தவமணி மொண்டிப்பட்டி ஊராட்சி மன்ற 7வது வார்டு உறுப்பினராக இருக்கிறார்.
கல்லாங்குத்து பகுதியில் இரும்பு கடை கண்ணாடி குப்பையை அரசு நிலத்தில் கொட்டியுள்ளனர். மேலும் தனியார் பால் நிறுவன கழிவு நீரும் அரசு நிலத்தில் விடப்பட்டுள்ளது.
இது அப்பகுதியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி உள்ளது. இதுகுறித்து வெங்கடேசன் திருச்சி மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குனர், மணப்பாறை வட்டாட்சியரிடமும் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து சுகாதார துறையும், ஊராட்சி நிர்வாகமும் குப்பை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி கண்டித்தனர். இந்நிலையில் சமூக ஆர்வலர் வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெங்கடேசன் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை இன்று நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.
அதில் கடந்த 28ஆம் தேதி சக்திவேல் என்கிற ராமன் உள்பட சுமார் 20க்கும் மேற்பட்ட இரும்பு கடை உரிமையாளர்கள் டீக்கடைக்கு வந்துள்ளனர். புகாரை திரும்ப பெறவில்லை என்றால்
வெங்கடேசனை கொலை செய்து விடுவோம் என்று எனது தாயார் தவமணியை அவதூறாக திட்டியதோடு மிரட்டிச் சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து நானும் எனது தாயாரும் பாதுகாப்பு கோரி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் காவல்துறையினர் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
எங்களை சமரசம் பேசி முடித்து வைப்பதிலேயே காவல்துறையினர் குறியாக உள்ளனர். மேலும் எதிர் தரப்பினர் அளித்த பொய் புகாரின் அடிப்படையில் எங்கள் மீது வழக்கு பதிவு செய்வதாக காவல்துறையினர் மிரட்டுகின்றனர.
எனது தாயார் ஒரு வார்டு உறுப்பினர் என்ற முறையிலும், நான் ஒரு சமூக ஆர்வலர் என்ற முறையிலும் இது போன்ற பொது காரியங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
ஆனால் இது போன்ற சமூக விரோதிகளால் எங்கள் பணிக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கு காவல்துறையும் துணை போவது வேதனை அளிக்கிறது. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு கல்லாங் குத்து அரசு நிலத்தில் கொட்டப்பட் குப்பைகளை நீக்கியும், அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்
இவ்வாறு அந்த மணியில் மனுவில் வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாவட்ட எஸ்பி.யை தொடர்பு கொண்டு புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி சரக டிஐஜி அலுவலகத்திலும் வெங்கடேசன் புகார் மனு அளித்தார்.