திருச்சி மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வங்கிகள் மூலம் கல்வி கடன் பெற்று தரும் சிறப்பு கல்விக்கடன் முகாம் இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இம்முகாமில் பல்வேறு உயர்கல்வி பயிலக்கூடிய மாணவர்களுக்கு சுமார் 14 கோடி மதிப்பிலான கல்வி கடன் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்குப் பிறகு நிருபர்களை சந்தித்த மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார்…
கல்வி அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்ய, விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு பிறகு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்ரீரங்கத்தில் செயல்படும் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களை துன்புறுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் விசாரணை செய்து வருகின்றனர்.
தவறு நடந்திருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உரிய அனுமதியின்றி செயல்படும் தனியார் விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிமமின்றி செயல்படும் தனியார் விடுதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கால அவகாசத்திற்குள் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விதிகளை மீறி செயல்படும் தனியார் பேருந்துகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வேகத்தில் செல்ல வேண்டும், ஒரு பேருந்துக்கு பின்னால் ஒரு பேருந்து குறிப்பிட்ட இடைவெளி விட்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றார்.