திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் மருங்காபுரி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே பிரதானமாக உள்ளது. திருச்சி மாவட்டம் என்றாலே பொதுவாக காவிரி டெல்டா பாசனப்பகுதியாக கருதப்படுகிறது. ஆனால் மாவட்டத்தின் தென்பகுதியில் கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இப்பகுதிகள் காவிரி ஆற்று பாசன பகுதிக்கு வெளியே உள்ளது. அதனால் கிணற்று பாசனத்தை மட்டுமே நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மலை இல்லாத நிலையில் குளங்கள் மற்றும் கிணறுகள் வறண்டு காணப்பட்டதால் விவசாயம் செழிக்காத நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது பருவமழை பெய்த காரணத்தால் குளங்கள் மற்றும் கிணறுகளில் ஓரளவிற்கு தண்ணீர் உள்ளது. இதனால் விவசாயிகள் சம்பா பருவத்திற்கான நெல் நடவு பணியை தொடங்கியுள்ளனர். புரட்டாசி மாதத்தில் நடவு பணி செய்தால் தான் தை மாதத்திற்கு முன்பாக அறுவடை செய்து தமிழர் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும் என்பதால் நடவு பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஆனால் தற்போது விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில் நாற்றங்காலில் இருந்து நாற்று பறித்து நடவுப்பணி மேற்கொள்வதற்கு விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இருந்து வந்துள்ள ஆண் தொழிலாளர்கள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாற்றங்காலில் இருந்து நாற்று பறித்து அதனை வயலில் நடவு செய்ய ஏக்கருக்கு ரூபாய் 4500 என ஒப்பந்த அடிப்படையில் பேசி
நடவு பணியை மேற்கொள்கின்றனர். 10 முதல் 15 பேர் வரை ஒவ்வொரு குழுவாக சென்று நடவு பணி செய்யும் வடமாநில தொழிலாளர்கள் இயந்திரங்களோடு போட்டி போடும் அளவிற்க்கு பணிகளை விறுவிறுப்பாக செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநில தொழிலாளர்களால் ஏக்கருக்கு ரூ.2000 வரை செலவு குறைவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நூறுநாள் வேலையால்தான் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை எனவும் 100 நாள் பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு அனுப்பி விவசாயம் செழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
தற்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் சில மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் வயல்களுக்கு நீர்பாய்ச்ச மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை எனவும் குறைந்த நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதால் அனைத்து வயல்களுக்கும் நீர்பாய்ச்ச முடியாதநிலை உள்ளது. எனவே சம்பா நடவுப்பணி முடியும் வரை 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருபுறம் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை என்றாலும் மற்றொரு புறம் விவசாய பணிகளை மேற்கொள்ள கொள்ள சிறுவர் சிறுமியரும் ஆர்வமுடன் வயலில் இறங்கி நாற்று நடவுப்பணி செய்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழுவாக நடவுப்பணி செய்யும் பெண்கள் களைப்பு தெரியாமல் இருக்க குலவை சத்தம் எழுப்பி நாற்று நடுவது ரசிப்பதாக உள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் மட்டுமே வடமாநில தொழிலாளர்கள் நடவுப்பணி மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது டெல்டா அல்லாத பகுதிகளையும் குறிவைத்து மணப்பாறை பகுதியில் முதன் முறையாக விவசாய பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.