கரூரை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவர் கரூரில் இருந்து நாகைக்கு கட்டிட வேலைக்காக லாரியில் ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். தஞ்சை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி மேம்பாலம் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டில் மோதாமல் இருந்து லாரியை ரத்தினக்குமார் திருப்பி உள்ளார். இதில் நிலை தடுமாறி லாரி கவிழ்ந்தது. இதனால் ஜல்லி முழுவதும் சாலையில் சிதறியது. இந்த விபத்தில் டிரைவர் ரத்தினகுமார் காயம் அடைந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த செங்கிப்பட்டி போலீசார் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் ரத்தினக்குமாரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் செங்கிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையின் உயர்மட்ட பாலம் சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது தெரியாமல் ரத்தினக்குமார் லாரியை மேம்பாலம் வழியாக செல்ல வந்துள்ளார். மேம்பாலம் அருகில் வந்த போதுதான் போக்குவரத்து செல்லாமல் இருக்க வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு இருப்பதை பார்த்து அதன் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை டிரைவர் ரத்தினகுமார் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது தெரியவந்தது.