திருச்சியில் நடந்த இரு வேறு சம்பவங்களில் இருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். திருச்சி ராம்ஜீநகர் அருகேயுள்ள நவலூர்குட்டப்பட்டு அன்புநகரையடுத்துள்ள ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் சரவணன் (வயது 20). கட்டடத் தொழிலாளியான இவருக்கு ஜல்லிக்கட்டு ஆர்வ மிகுதியால், சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு நிகழ்விலும் பங்கேற்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனால் சரிவர வேலைக்குச் செல்வதில்லையாம். இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு திங்கள்கிழமை இரவு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து நேற்று காலை வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
புகாரின் பேரில் ராம்ஜீநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதே போன்று திருச்சி மாவட்டம் துவாக்குடி, திருவிக நகரை சேர்ந்தவர் பாலாஜி – ராஜேஸ்வரி (வயது 22) தம்பதியர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை),பாலாஜி தனது மனைவியை விராலிமலை கோயிலுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். வீடு வந்ததும் கடை வீதிக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். இதற்கிடையே பாலாஜியின் தாயார், ராஜேஸ்வரியை பகல் உணவுக்கு அழைத்தாராம், ஆனால் ராஜேஸ்வரியியமிருந்து பதிலேதும் வரவில்லையாம். இதனையடுத்து அறைக்கதவை தட்டி அழைத்தபோதும் கதவு உள்பக்கம் தாழிடப்பட்ட நிலையில் கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ராஜேஸ்வரி துப்பட்டாவில் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார்.
இதையடுத்துஉடனடியாக அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ராஜேஸ்வரி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன நிலையில் பெண் இறந்துள்ளதையடுத்து கோட்டாட்சியர் தனி விசாரணையும் மேற்கொண்டுள்ளார்.