திருச்சியை சேர்ந்தவர் சாரங்கன்(32) திருநங்கை. அரியமங்கலம் காவல் நிலைய எல்லையில் நடந்த திருட்டு தொடர்பாக சாரங்கன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சி.பி.1 என்ற தனிச்சிறையில் இருந்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் சிறை ஏட்டு மாரீஸ்வரன் காவல் பணியில் இருந்தார். அப்போது அவர் சாரங்கனை ஓரின சேர்க்கைக்கு அழைத்து டார்ச்சர் செய்துள்ளார்.
இதுகுறித்து சாரங்கன், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், டி.ஐ.ஜி., ஜெயபாரதியிடம் புகார் செய்தார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்டப்பணிகள் ஆணையத்தில், சாரங்கன் புகார் மனு கொடுத்தார்.
இது குறித்து விசாரிக்க சுப்புராமன் என்ற வக்கீல் நியமிக்கப்பட்டார். விசாரணை நடந்தது. சிறையில் உள்ள கண்காணிப்பு காமிரா ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சாரங்கனின் புகார் உண்மை என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கைதியின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், டி.ஐ.ஜி., ஜெயபாரதி, ஏட்டு மாரீஸ்வரன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள், 11ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன், டி.ஐ.ஜி., ஜெயபாரதி வேலுார் பயிற்சிப் பள்ளிக்கு டி.ஐ.ஜி.,யாகவும், கண்காணிப்பாளர் ஆண்டாள் , திருச்சி பயிற்சிப் பள்ளிக்கு கண்காணிப்பாளராகவும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.