திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆலத்தூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது. சந்திராயன் – 3 வெற்றி விழா, காந்தியடிகள் அரையாடைக்கு மாறிய மதுரை சம்பவத்தை நிறைவுகூரும் விழா மற்றும்அகில இந்திய காந்திய மக்கள் இயக்க தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் கருப்பையாவிற்கு உலக சாதனையாளர் விருது வழங்கும் விழாவும் நடந்தது.
விழாவுக்கு ஆதவன் கலை அறிவியல் கல்லூரி நிறுவன செயலாளரும், வையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான டாக்டர்.சூர்யா சுப்ரமணியன் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். பொருளாளர் தங்கபாண்டியன் வரவேற்புரையாற்றினார்.
புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் முத்து, கருப்பையாவிற்கு உலக சாதனையாளர் விருது வழங்கினார். சர்வோதயா சங்க செயலாளர் சுப்பிரமணியன் நினைவு பரிசு வழங்கினார். மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, காவல் துணைகண்காணிப்பாளர் ராமநாதன் ஆகியோர் சைக்கிள் பயணத்தை துவக்கி வைத்து சிறப்புறையாற்றினர். விழாவில் சந்திராயன் – 3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கி
சாதித்தமைக்காக அதன் வெற்றியை கொண்டாடும் வகையில் கல்லூரி வளாகத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவிற்கு மூவர்ண தேசியக்கொடியுடன் சைக்கிள் யாத்திரை மேற்கொள்ளும் கருப்பையாவை சட்டமன்ற உறுப்பினர், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். கல்லூரி முதல்வர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
ஆலத்தூரில் இருந்து துவங்கிய சைக்கிள் யாத்திரை 500 கிலோமீட்டர் தூரம் 24 நாட்கள் பயணம் மேற்கொண்டு வருகிற அக்டோபர் 15 ம்தேதி அப்துல்கலாம் பிறந்தநாள் அன்று இஸ்ரோவை அடைய உள்ளார். செல்லும் வழியில் அறிவியல், சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம், வளர்ச்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.