இந்திய பொருளாதார வளர்ச்சியில் , மக்கள் சேவையில் பெரும் பங்காற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மய முயற்சிகளை கைவிட வேண்டும், எளிய மக்களுக்கும் இன்சூரன்ஸ் சேவை கிடைக்கும் வகையில் சிறு , குறு நகரங்களில் அமைந்துள்ள பொது இன்சூரன்ஸ் அலுவல மூடல்களை கைவிட வேண்டும், உடனடியாக அனைத்து நிலைகளிலும் புதிய ஊழியர்கள் பணி நியமனம் செய்யப் வேண்டும் , புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரையும் பழைய பென்ஷன் திட்டத்தில் இணைக்க வேண்டும், அதுவரை புதிய பென்ஷன் திட்டத்தில் நிறுவனங்களின் பங்களிப்பை 14 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், எல்.ஐ.சி மற்றும் வங்கிகளை போல் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்த வேண்டும் , 1.8.2022 முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தயை உடனே துவக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் புதனன்று திருச்சி – கன்டோன்மெண்டில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பொதுத்துறை காப்பீட்டு அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். திருச்சி கூட்டு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் , மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க அதிகாரிகள் சங்க ரங்கராஜன், வினோத் ராஜா , பொது காப்பீட்டு ஊழியர் அகில இந்திய சங்க திருச்சி கிளை செயலாளர் செந்தில் மற்றும் பொது இன்சூரன்ஸ் ஓய்வூதிய சங்கத்தின் துணைத் தலைவர் மணிவேல், பரிஷத் நலச்சங்க தலைவர் செந்தில் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் அரசு பொது இன்சூரன்ஸ்
நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் நல சங்கங்களை சார்ந்த அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள், முகவர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.