திருச்சி மாநகரில் ஓடும் பஸ்சில் ஜேப்படி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள், இணையதள மோசடி, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஏ.டி.எம். கார்டு எண், ஓ.டி.பி. எண் போன்றவற்றை கேட்டு பணம் மோசடி செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
மாநகர போலீசார் குற்றங்களை தடுக்க எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மாற்று திட்டங்களை தீட்டி தங்கள் தொழிலை தொடர்கிறார்கள். இந்நிலையில் திருச்சி மாநகர தீவிர குற்றத்தடுப்பு பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் கருணாகரன், தற்போது பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இவர் பாலக்கரை வழியாக செல்லும் பஸ்களை பஸ்நிறுத்தத்தில் நிறுத்தி, பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
பொதுமக்கள் மத்தியில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் பேசும்போது கூறியதாவது:-
பாலக்கரை இன்ஸ்பெக்டர் நான். பஸ்சில் நிறைய திருட்டு நடக்கிறது. திருட்டு நடப்பதற்கு காரணம், நமது அஜாக்கிரதை தான். நகையோ, பணமோ, பொருளோ பர்சில் வைத்து கட்டைப்பையில் வைத்து எடுத்து வந்தால், செல்போனில் பேசிக்கொண்டே இருக்க கூடாது. உங்கள் அருகில் உள்ளவர்கள் திருடுபவர்களாக கூட இருக்கலாம். அதை அவர்கள் நைசாக எடுத்து சென்றுவிடுவர். நீங்கள் வீட்டுக்கு சென்று பார்க்கும் போது தான். பொருள் திருடு போனது தெரியும். அது எந்த இடத்தில் திருடு போனது என்று உங்களுக்கே தெரியாது. பிறகு போலீஸ் ஸ்டேசனிறகு புகார் தர சென்றால், ஏறிய இடத்தில் புகார் கொடுங்கள், இறங்கிய இடத்தில் புகார் கொடுங்கள் என்று அலைக்கழிக்கப்படுவீர்கள். இதில் பல சிக்கல்கள் உள்ளன. அதனால் உங்கள் பொருளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதுபோல், உங்கள் ஏ.டி.எம்.கார்டை அருகில் உள்ளவர்களிடம் கொடுத்து ரகசியகுறியீட்டை கூறி பணம் எடுத்து தர சொல்லக்கூடாது. நீங்கள் எந்த ஏ.டி.எம்.கார்டை கொடுத்தீர்களோ, அதேபோல் போலியான ஏ.டி.எம். கார்டை கொடுத்து உங்களை ஏமாற்றி விடுவார்கள். வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று அனைத்து நகைகளையும் பையில் வைத்து, வெளியூர் செல்லும் போது எடுத்து செல்லாதீர்கள் என்று பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார். பொதுமக்கள் கைதட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.