திருச்சி, இனாம்குளத்தூர் பூலாங்குளத்துப்பட்டி ஆதிதிராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது மனைவி ஆராயி தனது கணவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் சில நாட்கள் தங்கி இருந்து கணவரை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் மணப்பாறை மஞ்சம்பட்டி அமையபுரம் பகுதியைச் சேர்ந்த ஆராயியின் உறவுக்கார வாலிபர் சரவணன் (30) என்பவர் வந்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தன்னை பார்க்க வந்திருக்கலாம் என பாண்டியன் கருதினார். மேலும் சரவணன் அவர்களிடம் பாசமாக நடந்து கொண்டுள்ளார். கணவன் – இருவரும் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த நிலையில் அந்த நபர் வீட்டை தான் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார். உறவுக்காரர் தானே என ஆராயியும் அதற்கு சம்மதித்தார்.
இதற்கிடையே பீரோவில் வைத்திருந்த பொருட்கள் கலைந்து கிடப்பதை கண்டு பாண்டியனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.பின்னர் அதில் வைத்திருந்த நகைகளை தேடி பார்த்த போது காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.
வேலியாக இருந்து வீட்டை பார்த்துக் கொள்வதாக கூறிய சரவணன் பீரோவை திறந்து அதிலிருந்த மூன்றே முக்கால் பவுன் நகைகளை திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்து ஆராயி ராம்ஜி நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக சரவணனின் கையில் பணம் புழங்குவதை நோட்டமிட்டு பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். வேலியாக இருந்து வீட்டைப் பார்த்துக் கொள்வதாக கூறிய உறவுக்கார வாலிபர் நகையை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.