திருச்சி காஜாமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஐ.ஜே.கேவின் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இன்று பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும், ஐஜேகே கட்சி நிறுவனத் தலைவர் பச்சமுத்து (எ) பாரிவேந்தர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு மத்திய அரசு கடந்த ஐந்து வருடங்களில் ஒதுக்கிய. 17.5 கோடி ரூபாயில், ஒரு பைசா கூட மீதம் இல்லாமல் தொகுதி முழுவதும் செலவிட்டு உள்ளேன் அது எனக்கு மன நிறைவு அளிக்கிறது.
மத்திய அரசு எனக்கு வழங்கிய நிதியை தவிர எனது சொந்த நிதியாக, 126 கோடியே 90 லட்சத்து 16 ஆயிரத்து 400 ரூபாய் செலவிட்டு உள்ளேன்.
பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட மாணவர்களுக்கான
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி சுமார் 1200க்கு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தொகுதி நிதி மட்டுமல்லாது எனது சொந்த நிதியில் பள்ளிக் கட்டிடங்கள், கழிவறை, தண்ணீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூருக்கு ரயில் என்பது, காமராஜரின் ஆட்சி காலம் முதல் 50ஆண்டு கனவுத் திட்டம். வரும், 2023-2024ம் ஆண்டு மத்திய முழு பட்ஜெட்டில் அரியலூர் – பெரம்பலூர் ரயில் வழித்தடத்திற்கு நிதி ஒதுக்கப்படும்.
2024-2025 ஆம் நிதியாண்டில் பணிகள் நிறைவடையும். அது எங்களது தேர்தல் வாக்குறுதி. எனது நட்பின் காரணமாக அதனை சாதித்து முடிப்பேன். பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுடன் இருந்த நட்பின் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் கிடந்த, 3மேம்பால பணிகளை பூர்த்தி செய்து கொடுத்துள்ளோம்.
நான் வெற்றிப்பெற்ற திமுக அணியினருடன் இருந்திருந்தால் இந்த பணிகளை மக்களுக்கு கொடுத்திருக்க முடியாது.
தமிழகம் முழுவதும் ஐஜேகே கட்சிக்கு அமைப்பு இருக்கிறது. அதில் தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் கடந்த, 3 நாட்களாக நடந்துவருகிறது. திமுக ஒரு நாடக கம்பெனி. அது ஊழல் செய்வதை செய்தியாக வெளியிட்டால், அந்த ஊடகத்தை மக்கள் பார்க்கமுடியாத வகையில் கேபிளில் இருந்து பிடுங்கி விடுவார்கள்.
ஆளும்கட்சியினருக்கு, தான், தனது குடும்பம் என்ற பதவி வெறி வந்துவிட்டது. பாவப்பட்ட எழைகள் கொடுக்கும் வரிப்பணத்தில் ஊழல் செய்வது பாவத்திலும் பாவம். பெருவாரியான மக்கள் கூறுவது என்னவென்றால் திமுக ஊழலுக்கு புகழ்பெற்ற கட்சி என்பதுதான்.
பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அருண் நேரு எனக்கு போட்டி அல்ல. அருண் நேருவை அவரது சொந்தக் கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. விரலுக்கு தகுந்த வீக்கம். பெரிய கட்சிக்கு பெரிய அளவில் தேர்தல் பத்திரம் மூலமாக நிதி கிடைத்துள்ளது.
நான் தாமரை சின்னத்தில் போட்டியிடுவேன். எனது தொகுதியில் பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அரசியல் என்பதை சம்பாதிப்பதற்கு என மாற்றிவிட்டனர். அங்கீகாரம் கிடைக்கவும், மரியாதைக்காவும், புகழுக்காகவும், அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய நினைப்பவர்கள் மட்டும் அரசியலுக்கு வரவேண்டும்.
காந்தி பனியாஸ். அவர் செட்டியார். குஜராத்தி பனியாக்கள் லாப நட்ட கணக்கு பார்ப்பவர்கள். நமக்கு அரசு வேலை தான் வேண்டும் என்ற சிந்தனையில் மாற்ற வேண்டும். தனியார் துறையை எதிரியாகவும், அரசுத் துறையை புனிதமாகவும் பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும்” என்றார்.
“கடந்த முறை போல் கடைசி நேரத்தில் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?” என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் அதிர்ச்சியடைந்த பாரிவேந்தர், “அடப்பாவி..திமுக வுடன் கூட்டணி வைத்ததை, அந்த பாவத்தை எங்கு கொண்டு போய் சேர்ப்பது என்று தெரியாமல் இருக்கிறேன்.
வெற்றிப் பெற்ற இரண்டு மாதத்தில் அவர்களது கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டேன். எனது பார்வை தேசிய பார்வை. அவர்களது பார்வை குறுகிய பார்வை” என தெரிவித்தார்.