திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் பவன்குமார் சிங் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM) 11வது ஆண்டு பட்டமளிப்பு விழா 5ம் தேதி(இன்று) மாலை நடைபெற உள்ளது. இதில் இந்திய ஸ்டீல் மேலாண்மை நிறுவன தலைவர் சோமா மண்டல், ஐஐஎம் குழும தலைவர் ஜலாஜ் தானி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகின்றனர்.
ஆராய்ச்சி, மேலாண்மை, முதுகலை வணிக மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 307 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு 172 தொழிற்சாலைகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மூலம் மாணவர்கள் பலருக்கும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஆண்டுக்கு 30 முதல் 40 லட்சம் வருமானத்துடன் கூடிய பணி நியமனம் முன்னணி நிறுவனங்களில் கிடைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஐஐஎம்களில் திருச்சி ஐஐஎம் 9வது இடத்திலும், மேலாண்மை கல்லுாரிகளில் 18வது இடத்தில் உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி ஆசிரியர்களும் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
திருச்சி ஐஐஎம்மில் உள்ள மாணவர்களில் 15% தமிழகத்தை சேர்ந்தவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
5 ஆண்டு மேலாண்மை கல்வி பிரிவு திருச்சி ஐஐஎம்மில் தற்போது தொடங்கும் திட்டம் இல்லை.
உள் கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக உயர்த்தப்பட்டு மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டு வருகிறது. பல்வேறு துறை சார்பில் சான்றிதழ் படிப்புகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.