ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நவாஸ் கனி மீண்டும் வேட்பாளராக அக்கட்சியின் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் ராமநாதபுரம் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்க்கு ஒதுக்கிய திமுக தலைமைக்கு நன்றி தெரிவித்தும் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒதுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் தொகுதியின் வேட்பாளராக தற்போதைய ராமநாதபுரம் தொகுதியின் எம்.பி.யாக இருக்கக்கூடிய நவாஸ் கனியை மீண்டும் வேட்பாளராக நிறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களை சந்தித்து பேசிய கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன்… திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று இருக்க கூடிய கட்சிகளுக்கு தொடர்ந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதோடு இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நிலையில் தான் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகிறோம். மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் அதை இரட்டிப்பாக நாங்கள் வரவேற்போம் என்றார்.