திருச்சி திருவெறும்பூர் அருகே பொன்மலை எக்ஸ் சர்வீஸ் மேன் காலனி 13வது தெருவை சேர்ந்தவர் அப்துல் கஃபார் இவர் அதே பகுதியில் கறிக்கடை மற்றும் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பொன்மலை தங்கேஸ்வரி நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று தனது மனைவி 2 மகள்கள் மற்றும் அம்மாவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு 12.30 மணி அளவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து அங்கிருந்த மோட்டார் சைக்கிள், குளிர்சாதனப்பெட்டி ஆகியவற்றை தீ வைத்து எரித்துள்ளனர். மேலும் வீட்டின் மாடிக்கு சென்று தண்ணீர் டேங்க்கையும் உடைத்துள்ளனர் பின்பு மேலிருந்து ஆஸ்பிடஸ் செட் வழியாக குதித்து கீழே இறங்கி பின்பக்க வழியாக போய் பின்பக்க தாழ்ப்பாளை உடைத்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்த முட்டைகளை எடுத்து கீழே போட்டு உடைத்து விட்டு தப்பிவிட்டனர். வீட்டில் தூங்கிக்
கொண்டிருந்தவர்கள் ஏதோ தீப்பிடித்து எரிகிற வாடை அடிப்பதாக கூறி திடீரென எழுந்துள்ளனர். அப்பொழுது வெளியே சென்று பார்த்த பொழுது மோட்டார் சைக்கிளும் குளிர்சாதனப்பெட்டியும் தீப்பிடித்து எரிந்துள்ளது.
உடனடியாக அவர்கள் அதனை அணைப்பதற்காக தண்ணீர் பிடிக்க சென்றுள்ளனர் அப்பொழுது தண்ணீர் டேங்க் உடைந்திருந்ததால் தண்ணீரும் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளனர். இதனால் பதட்டம் அடைந்த அவர்கள் பொன்மலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை செய்தனர். மேலும் இது குறித்து அப்துல் கஃபார் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து வீடு புகுந்து மிரட்டும் வகையில் மோட்டார் சைக்கிள் மற்றும் குளிர்சாதன பெட்டியை எரித்து விட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றன.