திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள பசுமைநகர் இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் 50 வயதான குமரன். இவர் மருந்து மாத்திரைகள் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குமரன் பணிக்கு சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி மாலையில் ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது தந்தையார் வீட்டிற்கு
சென்று உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த வளையல், நெக்லஸ், ஆரம், செயின் உள்ளிட்ட 22 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பணிகளை முடித்துவிட்டு இரவு 10.30 மணியளவில் குமரன் வீட்டிற்க்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் போலீசார் நகைகள் கொள்ளை போனது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் சிறிது தூரம் ஓடிவிட்டு விட்டு நின்று விட்டது.
இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.