வங்க கடலில் மன்னார் வளைகுடா பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 தினங்களாக மழை கொட்டுகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், திருச்சி உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டன.
இதனால் திருச்சியில் இரண்டு நாட்களாக பெய்த அடை மழை கொட்டுகிறது. தெருக்களில் மழை வெள்ளம் ஆறு போல ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. குறிப்பாக கிராப்பட்டி அன்பு நகர், அருணாச்சலம் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், சக்தி விநாயகர் கோயில் தெரு, டி.எஸ் நகர், உறையூர், லிங்கா நகர், தில்லை நகர், அய்யப்பன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை வரை 2
அடி உயரத்திற்கு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் இன்று காலை நகராட்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, கிராப்பட்டி அன்பு நகர், அருணாச்சலம் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், சக்தி விநாயகர் கோயில் தெரு, டி.எஸ் நகர், உறையூர், லிங்கா நகர், ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதை ஆய்வு செய்தார். அங்கு தேங்கியுள்ள தண்ணீரை உடனே வெளியேற்ற உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள் அங்கு வந்து பணிகளை தொடங்கினர். தொடர் மழையால் திருச்சி முழுவதும் தத்தளிக்கிறது.
இது குறித்து அமைச்சர் நேரு கூறும்போது.. கிராப்பட்டி அன்பு நகர், அருணாச்சலம் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், சக்தி விநாயகர் கோயில் தெரு, டி.எஸ் நகர், உறையூர், லிங்கா நகர், ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதை ஆய்வு செய்தேன்.
மழைப்பொழிவு மேலும் இருக்கும் என்பதால் உடனடியாக தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ளூமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன் ‘ என்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் திரு.சரவணன் ஆகியோருடன் மாநகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.