அரியலூர் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் நல்லாட்சி ஈராண்டு நிறைவினை முன்னிட்டு அரசின் சாதனை விளக்கக் கையேட்டினை வெளியிட்டு பின்னர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று ஈராண்டு நிறைவு பெற்றதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த விவரங்கள் அடங்கிய கையேடு
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயார் செய்யப்பட்டு இன்றைய தினம் அரியலூரில் இக்கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இக்கையேடு ஈடில்லா ஆட்சி – ஈராண்டே சாட்சி என்ற தலைப்பில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த விவரங்கள் முழு தகவல்களுடன் இதில் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி மகளிர் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 268 கோடி பயணங்கள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்று தினசரி சராசரியாக 40 இலட்சம் பெண்கள் இலவச பேருந்துப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஏழை, எளிய மகளிருக்கு இத்திட்டம் மிகுந்த பயனை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) எஸ்.முருகண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், அனைத்துத்துறை அலுவலர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.