திருச்சி மாவட்டம், முசிறி அருகே தும்பலம் கிராமத்தை சேர்ந்தவர் கோல்டு குமார் (29). இவர் தமிழ் தேசம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். இவர் மீது பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக முசிறி போலீசார் வழக்குபதிவு செய்து முசிறி போலீசார் கோல்டு குமாரை கைது செய்து முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். இதனை அறிந்த அவரது ஆதரவாளர்கள் கோல்டு
குமாரை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் அரசு மருத்துவமனை முன்பு திருச்சி – முசிறி மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வருகிற 21-ம் தேதி முசிறியில் நடைபெறும் தமிழ்தேசம் கட்சியின் மாநாட்டை தடுப்பதற்காக போலீசார் இவ்வாறு செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் கோல்டு குமாரை முசிறி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.