திருச்சி விமான நிலைய2வது முனையம் திறப்பு விழா இன்று மதியம் நடந்தது. விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது விழா பந்தலில் அமா்ந்திருந்த பாஜகவினர் முதல்வர் பேசும்போது கூச்சல் போட்டுக்கொண்டே இருந்தனர். முதல்வர் தமிழக வெள்ளப்பாதிப்புக்கு நிவாரணம் வழங்கும்படி கோரிக்கை விடுத்தார். அதை விழா மேடையிலேயே மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக அந்த கோரிக்கையை ஆங்கிலத்திலும் பேசினார்.
அப்போதும் பாஜகவினர் கூச்சல் போட்டனர். பாரத் மாதாவுக்கு ஜே என்றும், மோடி வாழ்க, மோடி என்றும் அவர்கள் சத்தம் போட்டனர். ஆனாலும் முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சை நிறுத்தவுமில்லை, முதல்வர் பேச்சுக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அழைத்து வரப்பட்டவர்கள் போல பாஜகவினரின் செயல்பாடு இருந்தது. இதுபோல விமான நிலைய நுழைவு வாயிலில் திரண்டிருந்த திமுக, பாஜகவினரும் ஒருவருக்கு ஒருவர் போட்டி முழக்கமிட்டனர். திமுகவினர் கலைஞர் வாழ்க, ஸ்டாலின் வாழ்க என்றனர். அவர்கள் பதிலுக்கு மோடி வாழ்க, ஜெய் ஸ்ரீராம், என்று முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.