திருச்சி மாநகராட்சி 17வது வார்டு சந்துக்கடை பகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளை நாயக்கர் குளத்தெரு, ராணித்தெரு, பாபுரோடு உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆரம்பத்தில் வாந்தி, பேதி போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகி விட்டதாகவும் அந்த பகுதியில் பரவலாக பேசப்படுகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிக்கு வந்து தண்ணீரை காய்ச்சி குடிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் காய்ச்சலுக்கான காரணம் குறித்து அறிய மாநகராட்சி மருத்துவ முகாம் , ரத்த பரிசோதனை போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இன்று காலை அந்த பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் பிளீச்சிங் பவுடர் தூவினர்.
தகவல் அறிந்ததும் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து பார்வையிட்டார். காய்ச்சலை தடுக்க மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.