திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (71) மகன் ஜெயபாலன் (44). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், ஆரோக்கிய சாமி (63), அவர் மனைவி ரெஜினா மேரி (55), மகன் ரவி ரோமஸ் சார்லஸ் (37), ரவியின் மனைவி ஜான்சி ராணி (35) மற்றும் ஆரோக்கிய சாமியின் மகள் யோனியா கனிமொழி (26) ஆகியோர். இரு வீட்டாருக்கும் இடையில் எல்லைத் தகராறு நீண்டகாலமாக இருந்துள்ளது கடந்த 24.5.2020 அன்று ஜேம்ஸ் விறகுகளை கொண்டு வந்து தனது வீட்டு வாசலில் கொட்டியுள்ளார். அதில் சிறிது பக்கத்து வீட்டு முன்பாக சரிந்து, கொட்டிக் கிடந்துள்ளது. இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையில் வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வையம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் ஜேம்ஸ் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் அங்கு சென்று போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் நிலப்பிரச்னை என்பதால், மணப்பாறை கோட்டாட்சியரிடம் (ஆர்டிஓ) சென்று புகார் செய்து நிலத்தை அளந்து பிரச்னையை முடித்துக்கொள்ளுமாறு ஆலோசனை கூறிச்சென்றனர்.
அப்போதுதான் ஜேம்ஸ் போலீசில் புகார் கொடுத்த விஷயம், பக்கத்து வீட்டுக்காரரான ஆரோக்கிய சாமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ஜேம்சிடம், ஆரோக்கியசாமி குடும்பத்தார் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது ஆரோக்கியதாஸ் அறிவாளை எடுத்து வீசியதில் ஜேம்ஸ் நெற்றியில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது. இதை கண்டு ஜேம்சின் மகன் ஜெயபாலன் குறுக்கே பாய்ந்து தந்தையை காப்பாற்ற முயன்றார். அப்போது எதிர் தரப்பினர் அனைவரும் சேர்ந்து, ஜேம்சை விட்டுவிட்டு ஜெயபாலனை தாக்கியுள்ளனர்.
அவரை கீழே தள்ளி அவரது உயிர் நாடியில் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே ஜெயபாலன் உயிரிழந்தார். இதுகுறித்து வையம்பட்டி போலீஸôர் வழக்கு பதிந்து ஆரோக்கியசாமி உட்பட அவரது குடும்பத்தார் 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது தொடர்பாக திருச்சி மாவட்ட 2 வது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. விசாரணைகள், இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், ஆரோக்கியசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், ஜேம்ஸ் நெற்றியில் காயம் ஏற்படுத்தியதற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 3 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், அவரது மகன் ரவி ரோமஸ் சார்லஸ்க்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும், ரெஜினா மேரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும், கட்டத்தவறினால், மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார். வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த ஜான்சிராணி மற்றும் யோனியா கனிமொழி ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் 2 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞர் பாலசுப்ர மணியன் ஆஜரானார்.