தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னை சாஸ்திரி பவன் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். 10 ஆண்டு ஆட்சி செய்த மோடி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. காவிரி பிரச்னையை தீர்க்கவில்லை. கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் பெற்றுத்தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதற்காக அவர்கள் ரயில் மூலம் சென்னை செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு வந்தனர்.
திடீரென விவசாயிகள் உறையூர் பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்ச்செல்வன், தனபால், ராமச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் டவரில் ஏறி கோஷம் போட்டனர். உடனடியாக போலீசார் அங்கு வந்து அவர்களை இறங்கும்படி கோரிக்கை வைத்தனர். தீயணைப்பு படை வீரர்களும் அங்கு வந்து டவர் மேலே ஏறி விவசாயிகளை கீழே இறங்கும்படி கேட்டுக்கொண்டனர். தங்களை விடுவித்தால் தான் இறங்குவோம் என அவர்கள் பிடிவாதமாக உள்ளனர்.
இதனால் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை அவர்கள் டவரில் ஏறி நின்று கோஷம் போட்ட காட்சி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.