இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் அறிவித்ததை அடுத்து அனைத்துக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணி, அதிமுக தலைமையிலான அணி மற்றும் பிஜேபி தலைமையிலான அணி என அணி தலைவர்கள் பிரச்சாரத்திற்காக திருச்சிக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வருகிற 22ஆம் தேதி திருச்சி சிறுகானூரில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வர உள்ளார். இதே போல வரும் 24ஆம் தேதி அதிமுக தலைமையிலான கூட்டணிக்கான பிரச்சாரத்திற்காக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வர உள்ளார். பொதுக்கூட்டத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை திருச்சி மாவட்டம் வண்ணாங்கோவில் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கான இடத்தினை மாவட்ட செயலாளர்கள் பரஞ்சோதி, பா.குமார், சீனிவாசன் மற்றும் முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேலு, முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி ஆகியோர் பொதுக்கூட்ட இடத்தில் புல்டோசர் கொண்டு சீர்படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டனர்.