திருச்சி, தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வர்கள் லட்சுமி,முத்திரை ஆய்வர்கள் குணசீலன்,கெளரி, ஜெகதீசன் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்களான வெங்கடேசன், ராஜேந்திரன், அகஸ்டின், பாலசுப்ரமணியன், கார்த்திகேயன், பழனியம்மாள் உள்ளிட்ட தொழிலாளர் நலத்துறையினர், திருச்சி பொன்மலை வாரச்சந்தை, சுப்பிரமணியபுரம், டிவிஎஸ் டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், முத்திரையிடப்படாத 27 மின்னணு தராசுகள், 3 மேடை தராசுகள், 2 விட்ட தராசுகள் மற்றும் அரசு முத்திரை இல்லாமல் வணிகர்கள் பயன்படுத்திய 15 இரும்பு எடைக்கற்கள் ஆகியன கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மறுமுத்திரையிடாமல் தராசு மற்றும் எடைக்கற்களை பயன்படுத்திய இறைச்சிக் கடைகளின் உரிமையார்களுக்கு தலா ரூ.5000 வீதம் 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனைத்து வணிகர்களும் தங்களது வணிக பயன்பாட்டில் உள்ள எடையளவு மின்னணு இயந்திரங்களை ஆண்டுக்கு ஒரு முறை மறுமுத்திரையிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.