திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சி ராசாம்பாளையத்தில் உள்ள பாலாஜி நகர் ஒன்பதாவது வார்டில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் முதலமைச்சர் தனி பிரிவிற்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது .மேலும் மண்ணச்சநல்லூர் ராசாம்பாளையம் சாலை விரிவாக்க பணி மற்றும் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்ற போது இந்த பகுதிக்கு வந்த கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ராசாம்பாளையம் பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் தற்காலிக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஏழு நாட்களாக குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுசம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகம் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக புகார் அளித்தும் குடிநீர் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மண்ணச்சநல்லூர் ராசாம்பாளையம் சாலையில் காலி குடங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று மாலைக்குள் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.