திருச்சி யை சேர்ந்தவர் டாக்டர் ஸ்ரீதர், திருச்சி பாஜக தலைவராக இருந்தார். இவர் 1999 ம் ஆண்டு தனது கிளினிக்கில் இருந்து பைக்கில் சென்றபோது அவரை மர்ம நபா்கள் வழிமறித்து கொடூரமாக கொலை செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி, ஜாகீர் உசேன், தடா மூசா, ஷேக் ஜிந்தா மதார், ஷாஜகான் ஆகியோரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திருச்சி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த கொலையில் தொடர்புடைய ஜாகீர் உசேன், தடா மூசா, ஷேக் ஜிந்தா மதார் உள்பட பலருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஷாஜகானுக்கு, ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் ஷேக் ஜிந்தா மதார், ரகமத்துல்லா ஆகியோரது குடும்பத்தினர் அவர்களுக்கு இடைக்கால பரோல் வழங்க கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வு இருவருக்கும் 3 மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.