திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பி.மேட்டூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவரது மனைவி சாரதா (20). இவர்கள் இருவரும் 2 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். உப்பிலியபுரம் அருகே சோபனபுரத்தில் விஜயசேகரன் என்பவரின் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்து வந்தனர். விவசாய நிலத்திலேயே அவர்கள் தங்கி இருந்தனர்.
நேற்று காலை வழக்கம் போல் விஜயசேகரன் சோபனபுரம் சென்ற போது அங்கு வீட்டு வாசலில் கட்டிலில் விஜயசேகரன், சாரதா ஆகிய இருவரும் தலை, கழுத்து பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்ததும் உப்பிலியபுரம் போலீசார், தடயவியல் நிபுணர்கள் வந்து விசாரணை தொடங்கினர். சிறிது நேரத்தில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. திருச்சி எஸ்.பி. சுஜித்குமார், லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் ஆகியோரும் வந்து விசாரித்தனர்.
வீட்டில் இருந்த பொருட்களோ, நகைகளோ, பைக்கோ திருட்டு போகவில்லை. அதே நேரத்தில் இருவரும் படுத்திருந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டு கிடந்தனர். எனவே குறைந்தபட்சம் 4 பேர் வந்து தூங்கிகொண்டிருந்த தம்பதியை ஒரே நேரத்தில்வெட்டி சாய்த்திருக்க வேண்டும். ஒருவருக்கு பின் ஒருவரை கொலை செய்திருந்தால், ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்திருக்கலாம். ஆனால் அங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை.
கொலை செய்யப்பட்ட இடத்தில் ராஜ்குமாரின் பைக்கும் இருந்தது. அதையும் கொலையாளிகள் எடுத்து செல்லவில்லை. சாராதா கழுத்தில் கிடந்த தாலியும் திருட்டு போகவில்லை. எனவே நகை, பணத்துக்காக இந்த கொலை நடக்கவில்லை. முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகிறார்கள். ராஜ்குமாருக்கு யாருடன் விரோதம் இருந்தது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கொலை நடந்த இடத்தில் சில தடயங்கள் சிக்கி இருப்பதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.