திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் திவ்யா ( 33). இவருக்கு கடந்த 24-ந் தேதி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தபோது, ஒரு புதிய செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் எதிர்முனையில் பேசிய நபர் திவ்யாவிடம், உங்களது ஆதார் எண்ணை வைத்து ஒருவர் சிம்கார்டு வாங்கியதாகவும், அதை வைத்து செல்போன் மூலம் 25 பெண்களுக்கு ஆபாச படங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், இதுதொடர்பாக மும்பை சாந்தாகுரூஸ் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளதாகவும் கூறினார். அதன்பின்னர் சாந்தாகுரூஸ் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் பேசுவதாக கூறி ஒருவர் பேசியுள்ளார். அந்த நபர், 2 மணிநேரத்துக்குள் மும்பையில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு வர வேண்டும் என்றும், இன்னும் 2 மணி நேரத்துக்குள் உங்கள் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் முடக்கப்பட்டு விடும் என்றும் கூறி உள்ளார். மேலும், செல்போனுக்கு வரும் வீடியோ அழைப்பை எடுத்து பேசும்படியும் கூறி உள்ளார். இதையடுத்து திவ்யா செல்போனுக்கு வந்த வீடியோ அழைப்பை எடுத்து பேசினார். எதிர்முனையில் மும்பை போலீசின் சீருடை அணிந்தபடி பேசிய நபர், உங்களது செல்போன் எண்ணை வைத்து ஒருவர் மும்பையில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளதாகவும், அந்த வங்கி கணக்கு மும்பையில் பெரிய பணமோசடி வழக்கில் சம்பந்தப்பட்டதாகவும், அந்த வங்கி கணக்கில் இருந்து ரூ.6 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறினார். இதுதொடர்பாக உங்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டு பிறப்பித்துள்ளதாகவும் கூறினார். இந்த பிரச்சினையில் இருந்து வெளிவர தான் சொல்லும் வங்கி கணக்கிற்கு ரூ.11 லட்சத்தை பிணைத்தொகையாக அனுப்பி வைக்கும்படி கூறினார். பிரச்சினை முடிந்ததும் அந்த தொகை திருப்பி கொடுக்கப்படும் என்றும் கூறினார். இதனை நம்பிய திவ்யா ரூ.11 லட்சத்தை அந்த வங்கி கணக்கிற்கு அனுப்பினார். பின்னர் அந்த நபரை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டு பேச முயன்றபோது, அவர் பதில் அளிக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யா இதுகுறித்து திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மும்பை போலீஸ் போல் நடித்து பெண் டாக்டரிடம் நூதன முறையில் ரூ.11 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.