மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் முன்னேற்பாடு பணிகளை திமுக இப்போதே தொடங்கி விட்டது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் காந்தி மார்க்கெட் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
செயல்வீரர் கூட்டம் நடைபெறும் திருச்சி கிழக்கு தொகுதி திமுகவின் கோட்டை. எம்.ஜிஆர். கட்சி தொடங்கி முதன் முதலில் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட 1977லேயே திருச்சி கிழக்கில் திமுக தான் வெற்றி பெற்றது. மக்களவை தேர்தலுக்கு இன்னும்
ஓராண்டு காலம் உள்ளது. ஆனாலும் தேர்தலுக்கான ஆயத்த கூட்டத்தை கூட்டி உள்ளனர்.
நமது கூட்டணியை அப்படியே முதல்வர் அரவணைத்து கொண்டு செல்கிறார். இன்னும் கூடுதலாக நமது கூட்டணியில் எஸ்.டிபிஐ கட்சியும் சேரலாம். அதிமுக பாஜக ஒரு கூட்டணியாக நிற்கும். அவர்கள்(பாஜக) குறித்து வைத்துள்ள தொகுதியில் திருச்சியும் இருக்கிறதாக கேள்விபட்டேன். அவர்கள் அதிக அளவு பணத்தை செலவழிக்க திட்டமிட்டு உள்ளனர். அதை எப்படி சமாளிக்க வேண்டும் என நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
கடந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம். இப்போது அதை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும். கவர்னர் அரசியல் வாதிபோல பேசுகிறார். 10 ஆண்டுகளாக தங்கள் சொந்த பணத்தை கட்சி பணிக்கு நமது தோழர்கள் செலவிட்டனர். நம்மை கண்கொத்தி பாம்பாக பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் நமது முதல்வர் எதையும் சட்டப்படி, நியாயப்படி செய்கிறார்.
மக்களவை தேர்தலில் எள்முனையளவும் உற்சாகம் குறையாமல் பணியாற்றுங்கள் . நம்பிக்கையோடு செயல்படுங்கள்.மீண்டும் நாம் வெற்றிபெறுவோம். நமது தலைவர் அறிவிக்கும் வேட்பாளர் இந்த தொகுதியில் வெற்றி பெறுவார். 2 ஆண்டு திமுக ஆட்சியில் திருச்சி மாநகரத்திற்கு மட்டும் முதல்வர் ரூ.2 ஆயிரம் கோடி வழங்கி உள்ளார். திருச்சி மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் வர உள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி தரம் உயர்த்த ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு பேச்சாளராக நந்தகுமார் எம்.எல்.ஏ. வந்து உள்ளார். அவர் வேலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். அவா் இங்கு கற்றதை அவர் மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டும். அல்லது அவர் கற்றவித்தையை நமக்கு சொல்லித்தர வேண்டும்.
செயல்வீரர் கூட்டத்துக்கு அதிக அளவில் தொண்டர்கள், நிர்வாகிகள் வந்திருக்கிறீர்கள் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை , நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், பழனியாண்டி, துணை மேயர் திவ்யா, முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.