திருச்சி, திருவானைக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன். இவர் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கடந்த நவம்பர் 17ம் தேதியன்று அளித்தார். அதில்.. நான் தன் நிலத்தில் 20 வருடமாக செங்கல் காளவாய் நடத்தி வருகிறேன். எனக்கு சொந்தமான நிலம் மற்றும் செங்கல் காளவாயை அபரிக்க வேண்டும் என்று சீனிவாசன், விமல்குமார், விக்னேஸ்குமார், காசிராணி, சுரேஸ், லஞ்மி, கண்ணன், மாலதி, முத்துவேல், செல்வராஜ், மலர் ஆகியோர் கடந்த மாதம் 5.11.2023 அன்று ஸ்ரீரங்கம் 6வது வார்டு
திமுக செயலாளர் ஜனா என்பவரின் துணையுடன் 20க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்து என் இடத்தில் வேலி போட குழி பறித்தனர். அவர்களை தடுக்க முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை கடப்பாறையால் குத்தி உன்னை கொன்றுவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர். உயிருக்கு பயந்து அங்கிருந்து வந்துவிட்டேன். ரத்தம் அதிகம் போனதால் என் மைத்துனர் ஸ்ரீதரன் துணையுடன் ஸ்ரீரங்கம் ஜிஎச்சில் சிகிச்சையில் சேர்ந்தேன். பின்னர் ஸ்ரீரங்கம் போலீசாரிடம் இச்சம்பவம் குறித்து தெரிவித்தேன். ஆனால் இதுவரை போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கவில்லை. அரிவாள், கடப்பாறை போன்ற ஆயுதங்களுடன் நுழைந்து என்னை தாக்கியும், என் நிலத்தில் சட்டவிரோதமாக நுழைந்து வேலி போட முயன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என மதியழகன் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதகாலம் ஆகிவிட்ட நிலையில் ஸ்ரீரங்கம் போலீசார் கண்டுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பாக நுண்ணறிவுப்பிரிவு பிரிவு, எஸ்பிசிஐடி போலீசாரும் இது குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது தான் வேதனை என்கின்றனர் மதியழகன் தரப்பினர்.. இச்சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடிேயாக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.