திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம், குழுமணி பகுதியில் உள்ள மேக்குடி கிராமத்தில் அருள்மிகு மலையாள கருப்பண்ணசாமி, அருள்மிகு மதுரைகாளியம்மன், அருள்மிகு அய்யனார் திருக்கோயிலில் எதிர்வரும் ஆடி 28-(செவ்வாய் கிழமை) வழிபாடு செய்வது தொடர்பாக இருதரப்பினரிடையே சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இன்று ஸ்ரீரங்கம் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த அமைதிப்பேச்சுவார்த்தையின்போது, மேக்குடி பகுதியைச்சேர்ந்த பத்மநாபன், பாலமுத்து, நடராஜன் ஆகியோர் ஒரு தரப்பாகவும், அதே கிராமத்தை சேர்ந்த பாண்டியன், திருநாவுக்கரசு, ராஜகோபால் ஆகியோர் மற்றொரு தரப்பாகவும் கலந்து கொண்டனர். இறுதியில் மேக்குடி மலையாள கருப்பண்ணசுவாமி கோயில் வழிபாட்டில் சாதிய பாகுபாடு இன்றி அனைவரும் ஒருங்கிணைந்து திருவிழாவினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு ஊர் மக்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அதேநேரம் ஆடி 28- அன்று வழிபாடு செய்வதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாத வகையில் ஜீயபுரம் போலீசார் கண்காணிக்க வேண்டும் எனவும் வட்டாட்சியர் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த அமைதிப்பேச்சுவார்த்தை கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தரி, ஜீயபுரம் போலீஸ் எஸ்எஸ்ஐ ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் மற்றும் மேக்குடி கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.