Skip to content

போலீசுன்னா எப்படி இருக்கணும்? ஓப்பன் மைக்கில் திருச்சி டிஐஜிஅதிரடி: அதிர்ச்சியில் மத்திய மண்டலம்

  • by Authour

திருச்சி மண்டல டிஐ ஜி வருண்குமார்,  அரியலூர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு ஓபன் மைக்கில் தொடர்பு கொண்டு பேசினார். அரியலூர் மகளிர் காவல் நிலையத்தை முதலில் தொடர்பு கொண்ட டிஐஜி வருண்குமார், மகளிர் காவல் நிலையங்கள் எதற்காக தொடங்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அரியலூர் மகளிர் காவல் நிலைய மைக் வாட்ச் அலுவலர் பெண்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்று பதில் கூறினார். அதன் பின் பேசிய டிஐஜி வருண்குமார் இது உங்கள் ஆய்வாளருக்கு தெரிந்தால் நல்லது என்று கூறி பின்னர் உங்கள் காவல் நிலையம் அப்படி செயல்படுகிறதா?

உங்கள் காவல் நிலையத்தில் சுமதி என்று யார் பணியாற்றுகிறார்கள் என்று கேட்டார்.

சுமதி உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றுவதாகவும் நீதிமன்ற பணிகளை அவர் பார்த்து வருவதாகவும் மகளிர் காவல் நிலையத்தில் பதில் அளிக்கப்பட்டது.

பின்னர் பேசிய டி ஐ ஜி வருண் குமார் உங்கள் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுமதி, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தொடர்பு கொண்ட பொழுது, அவர் பதில் அளித்ததை கேளுங்கள் என்று மைக்கில் ஆடியோவை ஒளிபரப்பினார்.
அந்த ஆடியோவில் அந்த பாதிக்கப்பட்ட பெண் இன்று காவல் நிலையத்திற்கு வர முடியவில்லை நாளை வரலாமா என்று கேட்டதற்கு, உதவி ஆய்வாளர் சுமதி, பாதிக்கப்பட்ட பெண்ணை தரக்குறைவாக திட்டி போனை வைத்துவிட்டார்.

அதைத் தொடர்ந்து  எஸ் பி அலுவலக மைக் வாட்சிங் அலுவலரிடம் தொடர்பு கொண்டு டிஐஜி வருண்குமார் இந்த நடவடிக்கை சரிதானா என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த எஸ்பி ஆபிஸ் மை வாச்சிங் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அஜாக்கிரதையாக பதில் சொல்லியுள்ளார் .

பொதுமக்களிடம் கண்ணியமாக அவர் பேசவில்லை என்று கூறினார். இதற்கு
பதிலளித்த டி ஐ ஜி வருண்குமார், அஜாக்கிரதையாக பேசவில்லை அயோக்கியத்தனமாக பேசுகிறார் என்று கூறியதோடு மகளிர் காவல் நிலைய ஆய்வாளரை மைக்கில் பிடித்த டி ஐ ஜி வருண்குமார் என்ன இன்ஸ்பெக்டர் மகளிர் காவல் நிலையத்தில், இந்த பாஷையில் தான் பெண்களிடம் பேசுகிறீர்களா?

இதற்குத்தான் மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தெரியாமல் பேசிவிட்டார். சாரி சார் என்று பதில் அளித்தார்.

இந்த பதிலால் கோபத்தின் உச்சிக்கு சென்ற டிஐஜி வருண்குமார், வெட்கமாக இல்லையா உங்களுக்கெல்லாம் இன்ஸ்பெக்டர் என்று சொல்லிக் கொள்வதற்கு, தெரியாமல் பேசி விட்டார்கள் என்று கூறுகின்றீர்கள்.?

நீங்கள் தான் முதல் குற்றவாளி. ஆமாம் பேசியது தப்புதான் என்று சொல்ல முடியவில்லை. என்ன ஆய்வாளர் நீங்கள்? மைக்கில் பதில் சொல்கிறீர்களா. நேரில் வந்து பதில் சொல்கிறீர்களா என்று ஆய்வாளரை மைக்கில் டிஐஜி வருண் குமார், கண்டித்தார்.
இதையடுத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேசியது தப்புதான் என்று ஒத்துக் கொண்டார். உதவிக்காவல் ஆய்வாளரை
வாண் பண்ணுகிறேன்( எச்சரிக்கிறேன்) என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த டி ஐ ஜி வருண்குமார்,
அந்த காவல் நிலையத்தின்  லட்சணம் தெரிகிறது. ஒரு நாள் ஆய்விற்கு உங்கள் காவல் நிலையத்திற்கு வருகிறேன் என்று மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு எச்சரிக்கை விடுத்தார் டி ஐ ஜி வருண்குமார்.

பின்னர் எஸ் பி அலுவலகத்தை தொடர்பு கொண்ட டிஐஜி வருண் குமார், உடனடியாக மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுமதியை, திருச்சி ரேஞ்ச் ஆபீசுக்கு பணியிட மாற்றம் அனுப்ப வேண்டும். இங்கு அலுவலகத்தில் புகார் தருபவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை அவர் கற்றுக் கொள்ளட்டும். அதற்குப் பின்னர் தொலைதூர மாவட்டங்கள் ராமநாதபுரம், கன்னியாகுமரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு அந்த உதவி ஆய்வாளர் செல்லட்டும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

அதற்கு பதில் அளித்த அரியலூர் எஸ்பி ஆபிஸ் உடனடியாக பணியிட மாற்றம் செய்து திருச்சிக்கு அனுப்புவதாக பதில் அளித்தனர்.

பின்னர் பேசிய டி ஐ ஜி வருண்குமார் இதுபோன்று காவல்துறையில் அத்துமீறிய பேச்சுகள் ஏதாவது நடந்தால் மைக்கில் இந்த ஆடியோ ஒளிபரப்பு செய்யப்படும். எல்லா மாவட்டத்திற்கும் சொல்லி விடுங்கள் என்று கூறி மைக் தொடர்பை துண்டித்தார்.

டிஐஜி வருண் குமார் மைக்கில் கூப்பிட்டு அறிவுரை கூறியதோடு எச்சரிக்கை விடுத்த சம்பவம் மத்திய மண்டல காவல்துறையினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!