திருச்சி அடுத்த கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 4.02 ஏக்கர் பரப்பளவில் திருச்சி பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, தற்போது பணிகள் முடிவடைந்துள்ளன. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி பறவைகள் பூங்காவில் 60,000 சதுர அடி பரப்பளவில் ஐந்திணை என்றழைக்கப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய 5 வகை நில அமைப்புகளை விவரிக்கும் வகையில் அந்த நிலப்பகுதிகளுக்கான அடையாளங்கள் அமைக்கப்பட்டு, அங்கு பல்வேறு வண்ணங்களால் மனதை கொள்ளை கொள்ளும் வகையிலான நூற்றுக்கணக்கான பறவைகள் விடப்பட்டுள்ளன.பல்வேறு வகையான அழகிய கோழியினங்கள், நெருப்புக்கோழிகள், ஈமுக்கள் தனியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தனை சிறப்பு வாய்ந்த பறவைகள் பூங்கா திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதனை திறந்து வைத்து பூங்காவின் அழகை கண்டு ரசித்தார்.
விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த விழாவின் திருஷ்டி பரிகாரமாக துணை முதல்வர் கலந்து கொண்ட விழாவுக்கு, திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் ஒட்டுமொத்தமாக ஆப்சென்ட் ஆனார்கள். இந்த விழா நடைபெறும் இடம் மத்திய மாவட்டத்தில் உள்ளது. அதனால் தெற்கு மாவட்ட திமுகவினர் ஆப்சென்ட் ஆனதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திருச்சியில் வடக்கு மாவட்டம், மத்திய மாவட்டம் அமைச்சர் நேருவின் அணியாகவும், தெற்கு மாவட்டம் தனி அணியாகவும் உள்ளது. தெற்க மாவட்ட செயலாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் உள்ளார்.
நே்றறு நடந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழாவில், அமைச்சர் அன்பில் மகேஸ், மாநகர செயலாளர் மதிவாணன் ஆகிய இருவர் மட்டுமே பங்கேற்றனர். மற்ற நிர்வாகிகள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் விழாவுக்கு வரவில்லை.
இது குறித்து நிர்வாகிகள் மத்தியில் பேசியபோது, இந்த விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று கூறப்பட்டதால் விழாவிற்கு செல்லவில்லை என்று தெரிவித்தனர். துணை முதல்வர் விழாவில் தெற்கு மாவட்டத்தின் ஆப்சென்ட், ஒட்டு மொத்த திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் 200 தொகுதிகளை டார்க்கெட் வைத்தள்ள நிலையில், திருச்சி மாவட்ட திமுகவில் இப்படி பூசல் தொடர்வது திருச்சி மாவட்டத்தை தாண்டி தலைமை வரை புகார் சென்று உள்ளது.